Wednesday 14 May 2014

நூற்றாண்டை நினைவு கூருதலின் அரசியல் : கால்டுவெல்லும் அயோத்திதாசரும்

ஸ்டாலின் ராஜாங்கம்

தி.மு..தலைவர் மு.கருணாநிதிகால்டுவெல்லின் இருநூறாவது பிறந்த தினமான மே 7-ம் நாள் அவரைப்  போற்ற வேண்டும் என்று மே  4-ம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தமிழ், திராவிடன் போன்ற அடையாளங்கள் உருவாக கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற நூல்தான் வித்திட்டது என்கிற வகையில் அதன் ஆசிரியரான கால்டுவெல்லை கருணாநிதியின் இந்த அறிக்கை நினைவு கூறுகிறது. குறிப்பான பிரச்சினைகள் அடிப்படையில் அல்லாமல் தங்களை எல்லோருக்குமான அமைப்பாகவும் தலைவராகவும் காட்டிக்கொள்ள விரும்பும் யாரும் பயன்படுத்துவதாக தமிழ் அடையாளம் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் தமிழ் இங்கொரு சமய நம்பிக்கையின் இடத்தைப் பிடித்திருக்கிறது. கால்டுவெல்லின் கருத்துகள் மீது எதிரும் புதிருமான பல்வேறு பார்வைகள் வந்துவிட்ட நிலையிலும், அதைக் கணக்கிலெடுக்காமல் பழைய தமிழ் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலேயே கருணாநிதியின் கால்டுவெல் பற்றிய அறிக்கை அமைந்திருந்தது.

அதேவேளையில் கருணாநிதியின் தமிழ் உரிமை கோரல்களை எதிர்கொள்ளவும் தன்னை அவ்விடத்தில் நிறுவிக் கொள்ளவும் .தி.மு. தலைவர் ஜெயலலிதா முயற்சித்து வருவதும் வெளிப்படை. எனவே கருணாநிதியின் கால்டுவெல் பற்றிய அறிக்கைக்கு அடுத்த நாள் மே 5-ந்தேதி முதல்வரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதாவது கால்டுவெல்லின் 200-வது பிறந்த தினம் அரசுவிழாவாக கொண்டாடப்படும் என்றது அவரின் அறிக்கை. கருணாநிதியின் அறிக்கையைப் பார்த்து இதைச் செய்ததாக சொல்லிவிடக்கூடாது என்பதற்காக சி.எஸ்.. திருநெல்வேலி மண்டலப் பேராயர் வைத்த கோரிக்கையை ஏற்று இதை நடத்தவதாக அறிவித்திருந்தார். அன்றே மே 7-ந்தேதி கால்டுவெல் சிலைக்கு கருணாநிதி மாலை அணிவிப்பார் என்கிற தி.மு..வின் செய்திக் குறிப்பும் வெளியானது. தேர்தல் உள்ளிட்ட அதிகாரத் தேவைகளுக்காகச் சாதி உள்ளிட்ட உள்ளூர் உணர்ச்சிகளைப் பயன்படுத்தத் தயங்காத இக்கட்சிகள் இப்போது திராவிடம் மற்றும் தமிழ் அடையாளங்களைக் கைப்பற்றும் முனைப்பில் இந்த போட்டிகளில் உடுபடுகின்றன.

திராவிடக் கருத்தியல் மற்றும் திராவிட இயக்கம் போன்றவற்றிற்கு உரிமை
அயோத்திதாச பண்டிதர்
கோருவதற்காகவே கால்டுவெல்லின் (1814-1891) இருநூறாவது பிறந்த தினம் நினைவு கூறப்படுகிறதென்றால் இதே காரணத்துக்காக நினைவு கூற வேண்டிய மற்றொரு நாளும் இதே காலத்தில் வந்தது. நவீன காலத் தமிழகத்தின் முன்னோடி சிந்தனையாளர்களுள் ஒருவரான அயோத்திதாசரின் (1845-1914) நினைவு நூற்றாண்டு தினம்தான் அது. அவர் 1914-இம்இண்டு மே 5-ந்தேதி மரணமடைந்தார் என்ற வகையில் மே 5 அவரின் நூற்றாண்டு நினைவு நாளாகும். கால்டுவெல்லும் அயோத்திதாசரும் நேரடியாக தொடர்புடையவர்கள் இல்லை. இனால், திராவிட இயக்கக் கருத்தியலின் தோற்றுவாயோடு தொடர்புடையவர் என்ற முறையில் கால்டுவெல் போலவே அயோத்திதாசரையும் நினைவு கூர நியாயமிருக்கிறது.

கருணாநிதியின் அறிக்கையில் சொல்லப்படுவதைப் போலதிராவிட மொழிகள்’ என்ற சொல்லாக்கத்தை முதன்முதல் உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தவர் கால்டுவெல் அல்ல. அண்மையில் இது தொடர்பான பல்வேறு புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. திராவிட உறவுமுறை என்கிற அரிய நூலை எழுதிய டிரவுட்மன் செய்த ஆய்வின்படி கால்டுவெல்லின் நூல் (1856) வெளியாவதற்கு முன்னரே 1816-இல்திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தை எல்லிஸ் (1777-1819) வெளியிட்டார். ஆங்கிலேய அரசாங்க நிர்வாகியான எல்லீஸ் மொழியியல் நோக்கில் தொடங்கிய திராவிடமொழிகள் குறித்த இக்கருத்தாக்கத்தை கிறித்துவ மறை பரப்பாளரான கால்டுவெல், பின்னாளில் திராவிட மொழிகளைப் பேசி வாழ்ந்த குழுக்கள் குறித்த விரிவான ஆய்வாகவும் விரித்தார். அந்நூலுக்குப் பிறகு தமிழில் கால்கொண்ட நவீன வரலாற்று முறைமை மீது இக்கருத்தாக்கம் பெரும்தாக்கத்தைச் செலுத்தியது. இந்நிலையில்தான்திராவிடன்’ என்ற சொல்லை அரசியல் அமைப்பொன்றின் பெயராகவும் சமூகக் குழுவின் பெயராகவும் கையாண்டவராக முதலில் அயோத்திதாசரையே காணமுடிகிறது. 1891-இல்திராவிட மகாஜனசபை’ என்ற அமைப்பைத் தொடங்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமூகப் பணியாற்றியதோடு அம்மக்களை ‘(சாதிபேதமற்ற) திராவிடர்கள்’ என்ற பெயரிலேயே அடையாளப்படுத்தினார். அவர் காலத்திலேயே வேறு குழுவினர்ஆதி திராவிடன்’ என்கிற அடையாள முயற்சிகளிலும் உடுபட்டனர்.

திராவிட இயக்கத்திற்கு முன்னோடியாக 19-இம் நூற்றாண்டின் இறுதித் தொடங்கி பல்வேறு காரணிகள் பங்கு வகித்திருப்பினும் துல்லியமாக புலப்படும்படியான முன்னோடியாக அயோத்திதாசரைக் கூறலாம். திராவிட இயக்கத்தின் முன்னோடியாக கூறத்தக்க அளவில் அண்மையில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள சென்னை லௌகீக சங்கம் நடத்தியதத்துவவிவேசினி’ இதழ்களில் கூட (1878-1888) நாத்திகம், புரோகிதர் மறுப்பு போன்றவை உண்டெனினும் அப்போது உருவாகி வந்த தேசியவாத அரசியலைப் பிராமண அதிகாரமாகக் கருதி எதிர்த்தமை, இந்துமதம் மறுப்பு, இடஒதுக்கீடு கோரல் என்றெல்லாம் வெளிப்படையாக நவீன அரசியல் அமைப்புக்குட்பட்ட அரசியல் முகத்தோடு அயோத்திதாசர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட முன்னோடிகளே செயற்பட்டதைப் பார்க்க முடிகிறது.

தம்முடைய சமூகப்பணியின் தொடக்ககாலத்தில் ஆங்கிலேயர் அரசு குடிமதிப்பு கணக்கெடுப்பு எடுத்த போது (1881) பஞ்சமர்களை இந்துக்களாக பதிவு செய்யக்கூடாது என்றும், பூர்வத் தமிழர்கள் என்று பதிவுசெய்ய வேண்டுமென்றும் அயோத்திதாசர் அரசிடம் விண்ணப்பம் செய்தார். மேலும், 1880களின் மத்தியில்திராவிடர் கழகம்’ என்கிற அமைப்பை நடத்தி வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஜான் ரத்தினம் என்கிற கிறித்தவ மதத் துறவியோடு சேர்ந்துதிராவிட பாண்டியன்’ என்கிற இதழை அயோத்திதாசர் நடத்தினார் என்று குறிப்புகள் கூறுகின்றன. பிறகு 1891இல் அவர் தொடங்கிய அமைப்பின் பெயரில்திராவிடன்’ என்ற சொல் இடம்பெற்றது. தமிழரைக் குறிப்பதற்கான மறுசொல்லாகவே அச்சொல்லைக் கருதிய அயோத்திதாசரிடம் இப்பார்வை கால்டுவெல் கட்டமைத்த கருத்தியலின் தாக்கத்தினால் உண்டானது என்று சொன்னால் அது மிகையில்லை. தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக அரசாங்க ஆதரவைக் கோரிவந்த அவர் அரசியல் நோக்கில் காலனியத்தின் அடையாள உருவாக்கமானதிராவிடன்’ என்ற சொல்லை எடுத்துக்கொண்டார். ஆனால், அயோத்திதாசர் தம் எழுத்துகளில் கால்டுவெல் பெயரை நேரடியாக எங்கும் கூறவில்லை. பறையர் வகுப்பு பற்றி கால்டுவெல் காட்டும் தொன்மங்கள் வரலாறு போன்றவை அயோத்திதாசரின் எழுத்துகளில் விரிந்த சித்திரம் பெற்று நிற்கின்றன.

திராவிடக் கருத்தியலின் மூலவரான எல்லீஸ் பற்றிய தகவல் கூட அயோத்திதாசரிடம் உண்டு. அதாவது 1812-ம் ஆண்டு சென்னை கல்விச்சங்கத்தை ஆரம்பித்த எல்லிஸ் அதல் தமிழ் ஏடுகளைச் சேகரிக்கவும் அச்சிடவும் செய்தார். திராவிட மொழிகள் குறித்த பார்வை உருவாக இச்சங்கச் செயற்பாடுகள் அவருக்கு ஆதாரமாயின. அவர் குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பின்னர் கல்விச் சங்கத்தில் குறள் அச்சேறியது. அவர் ஏடுகளை சேகரித்து வந்தபோது எல்லீஸிடம் குறளையும் நாலடி நானூறையும் சுவடிகளாகத் தந்தவர் தம் பாட்டனார் கந்தப்பன் என்கிறார் அயோத்திதாசர். அதேபோல குறள் அச்சில் வெளியான பின்பு அதிலிருந்த பாடபேதங்களை எல்லீஸிடமே அவர் முறையிட்டதாகவும் கூறுகிறார்.

அயோத்திதாசரின் கருத்தியலும் செயற்பாடுகளும் 1914-இம் ஆண்டு மரணத்துக்குப் பிறகு பல்வேறு காரணிகளால் மெல்ல மெல்ல மறைந்தன. பிறகு இறந்து நூறாண்டுகளை எட்டும் தருணத்தில் 1990களில்தான் அவரின் சிந்தனைகள் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டன. அவரின் சிந்தனைகளைத் தொகுத்த ஞான.அலாய்சியஸ் அயோத்திதாசரின் கருத்துக்களே திராவிட இயக்கத்தின் முன்னோடி என்கிறார். அயோத்திதாசரின் கருத்துகளைத்தான் திராவிட இயக்கம் முழுமையாக பேசியதென்றோ, திராவிட இயக்கமே அவருக்குத்தான் சொந்தம் என்றோ உரிமை பாராட்ட முடியாது. அரசியல் கருத்துகள் தவிர்த்து அயோத்திதாசரின் பண்பாட்டுப் பார்வை திராவிட இயக்கத்தாரிடமிருந்து வேறுபட்டது. இனால் அரசியல் கருத்துகள் என்ற அளவில் வேறு எவரையும் விட திராவிட இயக்கம் அயோத்திதாசரை மூலவராகக் கொள்வதில் நியாயமிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. இனால் திராவிட அடையாளத்திற்காக போட்டியிடும் தற்காலக் கட்சிகள் அயோத்திதாசரைச் சிறிதளவும் நினைவு கூருவதில்லை. 1912-இம் ஆண்டின் சென்னை திராவிட மாணவர் அமைப்பொன்றைத் தொடக்கமாகக் கொண்டு 2012-ம் ஆண்டை திராவிட இயக்க நூற்றாண்டாக முன்பு கருணாநிதி அறிவித்தார். திராவிடக் கட்சிகள் அயோத்திதாசரைத் தொடக்கமாக கொள்ளாததை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இனால் அவருக்கு நூற்றாண்டு என்று வருகிறபோது கூடப் பேசாமல் மௌனம் காக்கிறார்கள்.

ஏனெனில் அயோத்திதாசர் உள்ளூர்க்காரர். இங்கு அவர் ஏதாவதொரு சாதியை சேர்ந்தவராகி விடுகிறார். அதிலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர். அந்த கணக்குக்கு ஏற்பவே அவரை நினைவு கூரவோ பேசாமலிருக்கவோ முடியும். இனால் கால்டுவெல்லை இப்படிச் சொல்லிவிட முடியாது. எனவே அவரை நினைவு கூருவது எளிமை. அதனால்தான் அவரை நினைவு கூருவதற்கு இங்கு போட்டி. அதற்கிணையாக அயோத்திதாசரை நினைவு கூர்ந்துவிடாமல் மௌனம் காப்பதிலும் போட்டி.

ராபர்ட் கால்டுவெல்
கால்டுவெல் 1856-இல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை அவர் உயிரோடு இருந்தபோது திருத்தம் செய்து 1876-இல் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டார். அதன்பிறகு அந்நூலின் மூன்றாம் பதிப்பு 1913-இம் இண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் அம்மூன்றாம் பதிப்பில் சில பகுதிகள் நீக்கப்பட்டு, நீக்கப்பட்டதற்கான குறிப்பே இல்லாமல் வெளியிடப்பட்டது. துண்டாடப்பட்ட இந்த வடிவமே முழுமையானது என்ற எண்ணம் அறிவுலகில் நிலைத்துவிட்டது. அந்நூலிலிருந்து நீக்கப்பட்ட பகுதிகளில் முக்கியமானது பழம் திராவிடக் குடிகள் பறையர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளே என்பதாகும். கால்டுவெல்லுக்குச் சிலையும் பெயரும் வைத்ததாக உரிமை பாராட்டுவதில் போட்டி போடும் கட்சிகளின் இட்சியிலும் கால்டுவெல் நூல் மீதான எந்த ஆய்வும் நடந்ததில்லை. மாறாக, தனி நபர்கள் முயற்சியில் 2009-இம் ஆண்டுதான் இரண்டாம் பதிப்பின் நேரடி மூன்றாம் பதிப்பு வெளியிடப்பட்டது (கவிதா சரண் பதிப்பகம்). இதுபோன்ற அறிவார்ந்த விசயங்களெல்லாம் இக்கட்சிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் வேறு சில விசயங்கள் மட்டும் சொல்லித் தராமலேயே தெரிகின்றன.
 
திராவிட மற்றும் தமிழ்க்குழுவின் முதற்குடியினராக தாழ்த்தப்பட்ட சாதியைக் காட்ட விரும்பாமல் அதற்கான நூலாதாரத்தையே 1913-இல் நீக்கிய விசயம்தான், இன்றைய 2014-இல் திராவிட கருத்தியலின் மூலவராக தாழ்த்தப்பட்ட ஒருவர் இருந்தார் என்பது தெரிந்து விடக்கூடாது என்கிற விசயமாகவும் தொடர்கிறது என்று கூறினால் அதை தவறென்று சொல்லமுடியுமா?