Thursday 12 July 2012

திராவிட இயக்கத்திற்காக நீங்கள் சிலுவை சுமப்பது ஏன்?

- ஸ்டாலின் ராஜாங்கம்

(தலித்துகள் பற்றிய தவறான வரலாற்றுத் தகவல்களை தந்த செம்மலர் இதழுக்கு எழுதப்பட்டு அவ்விதழ் பிரசுரிக்காமல் மறைத்த எதிர்வினை) 

செம்மலர் ஜூன் (2012) இதழில் அருணன் எழுதிய "எதிர்வினைக்கு மறுவினை" பற்றியும், மே 2012 இதழில் எஸ்..பெருமாள் எழுதிய "நீதிக்கட்சியும் சமூகநீதியும் என்ற கட்டுரை பற்றியும் என்னுடைய இக்கடிதம் அமைகிறது.

அருணனின் மறுவினையில் தகுந்த பதில் தருவதைக் காட்டிலும் வாதத்தை எதிர்கொள்ளும் சாமர்த்தியமே இருக்கிறது. தாம் எடுத்த நிலைபாட்டை எப்படியாவது வலிந்து நிறுவ வேண்டும் என்ற ஆவல் தான் அது. தலித் அரசியல் நிலைபாட்டிலிருந்து எழுப்பப்படும் கேள்விகளை எந்த அளவிற்கு எளிமைப்படுத்திப் புரிந்துக்கொள்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வருத்தமே மேலிடுகிறது.  "திராவிட இயக்கம் பிராமணரல்லாத சாதி இந்துக்களின் இயக்கம் என்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லும் போது, எம்முடைய வாதத்திற்கு வலுசேர்ப்பது போல் தெரியும் அருணனின் வாதம் அதனால் தலித்துகள் ஏன் உரிமை கொண்டாட வேண்டும் என்று கேட்கும் போது அதை ஏன் கூறினார் என்பது புரிந்து விடுகிறது.

திராவிட இயக்கம் சாதி இந்துக்களின் இயக்கம், அது தலித்துக்களைப் புறக்கணித்து வந்தது / வருகிறது என்பதை அறியாமல்தான் திராவிட இயக்கத்தின் தோற்றுவாய் மீது தலித்துகள் உரிமை கோருகிறார்கள் என்று அருணன் கருதுகிறாரா? இது குறித்த புரிதலோடுதான் இவ்வுரிமையைக் கோருகிறோம் என்பதை முதலில் கூற விரும்புகிறேன். தமிழ்ச்சூழலில் திராவிட இயக்கம்தான் தலித்துக்களைக் கைதூக்கி விட்டது; அதுவரையிலும் தலித்துகளுக்கு விழிப்புணர்வு ஓர்மையே இருந்ததில்லை என்பதைப் போன்ற தோற்றத்தை திராவிட இயக்கம் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. உண்மையிலேயே திராவிட இயக்கம் தலித்துகளை எண்ணிக்கை பெரும்பான்மைக்காகவே சேர்த்து வந்தது. தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்திவிட்டு தூக்கியெறிவதையே நடைமுறையாகக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் வரலாற்று ரீதியாக தலித்துகளின் அரசியல் விழிப்புணர்ச்சியை ஆராய்ந்து பார்ப்பதும், பிற அரசியல் கருத்துகளோடு -அமைப்புகளோடு அவர்களுக்கிருந்த உறவும் - முரணும் குறிப்பாக திராவிட இயக்கத்தோடு  இருந்த தொடர்பு பற்றி தேடிப் பார்ப்பதும் நடக்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது, திராவிட இயக்கம் பேசிய பெரும்பான்மையான கருத்துக்களைத் தொடக்கத்திலேயே தலித் முன்னோடிகளும் அமைப்புகளும் பேசியிருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த வகையில்தான் தொடக்க கால திராவிட இயக்க அமைப்புகளோடு தலித்துக்கள் அரசியல் உறவினை மேற்கொண்டிருந்தனர். ஆனால் திராவிட இயக்கம் அரசியல் கட்சி என்ற நிறுவனமாக மாறியபோது தங்களுக்குக் கருத்தியல் மற்றும் மக்கள் திரட்சி என்ற அளவில் தொடக்கத்தில் உதவிய தலித்துக்களை விலக்கியது. சாதி இந்து இயக்கமாக மாறியது.

அந்நிலையில்தான் தலித்துகள் தலித் மேம்பாடு மற்றும் சாதி மறுப்புக் கண்ணோட்டத்தில் பேசிய பல்வேறு கருத்துகளைத் திரித்து - சிதைத்து தன் கால சாதி இந்துத் திரட்சிக்கு உகந்த வகையில் திராவிட இயக்கம் மாறிக்கொண்டு விட்டது என்று தொடர்ந்து விளக்கி வந்திருக்கிறோம். இப்போதும் அந்தப் பொருளில் தான் திராவிட இயக்க வரையறையைப் பற்றி கேள்வி எழுப்பியிருந்தேன். எனவே இதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. மற்றபடி திராவிட இயக்கத்தின் சமகால சாதி அரசியல் உள்ளிட்ட கெடுதிகள் மீது உரிமைக்கோரி இந்த எதிர்வினையில் இறங்கவில்லை.

தொடர்ந்து தலித்துக்களைப் புறக்கணித்து வரும் திராவிட இயக்கம் நூற்றாண்டு பற்றிய வரையறையிலும் எம்மை புறக்கணிக்கிறது என்று கூறுவதே எம் நோக்கம். அதே வேளையில் பொதுச் சமூகத்திற்கும் கருத்தியலுக்கும் தலித்துகள் அளித்த பங்களிப்பை வரலாற்று ரீதியாக நிறுவிக் காட்டுவதும் கூட தலித் அடையாள ஓர்மையின் ஒரு பகுதி தான்.

திராவிடம் என்ற பெயரை அரசியல் அமைப்பு ரீதியாக முதலில் கையாண்டவர்கள் தலித்துகளே என்பதை திராவிட இயக்க ஆதரவு ஆய்வாளர்களான தொ.பரமசிவனும் (கவிதா சரண் இதழ், ஆகஸ்ட்- நவ.1997) எஸ்.வி.ராஜதுரை-வ.கீதா (Towards a Non – bramin millennium from Iyotheethass to periyar) ஆகியோரும் சொல்லி யிருக்கிறார்கள். திராவிடம் என்ற பெயரைக் கையாண்டதால் மட்டும் தலித்துக்களை முன்னோடிகளாகச் சொல்லவில்லை. திராவிட இயக்கம் பின்னாளில் பேசிய பிராமணர் எதிர்ப்பு - இந்திய தேசிய மறுப்பு - இட ஒதுக்கீடு - இந்து புராணம் மறுப்பு போன்றவற்றை வேறெவரையும் விட தலித் முன்னோடிகளே உறுதியாகவும் விரிவாகவும் பேசினார்கள் என்பதால் தான் இவ்வுரிமை கோரல்.  இம்முன்னோடி முயற்சிகளைத் தொடக்கால பிராமணரல்லாத தலைவர்கள் அறிந்திருந்தார்கள். இது இன்றைக்குச் சொல்லப்படுவதில்லை. தேவையெனில் ஆதாரங்களோடு விவாதிக்கலாம்.

1916-ல் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது இந்தத் தொடக்கம் கூட முதலில் சிறப்பாக அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தனக்கான நோக்கத்தை அது அனைவரிடமும் எடுத்துச் சொல்லமுடியவில்லை. இந்நிலை சற்றொப்ப 1909 - ஆம் ஆண்டின் நிலையை ஒத்ததாகவே பெயரளவில் தான் இருந்தது என்கிறார் கு. நம்பியாரூரன் (அதாவது 1909-ம் ஆண்டைய நான் பிராமின் சங்கமும் 1992-ம் திராவிட சங்கமும் பெயரவிலான அமைப்புகளே). இவ்வாறு மக்கள் திரட்சி சென்றடையாத நீதிக்கட்சியை 1917-ம் அக்டோபரில் நடந்த பஞ்சமர் மாநாடுதான் பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்த்தது. அது ஸ்பர்டாங்க் மாநாடு என்று வரலாற்றில் கூறப்படுகிறது.  இம்மாநாடு பற்றி யூஜின் இர்ஷிக், கு. நம்பியாரூரன், ராஜாராமன் ஆகிய ஆங்கில ஆய்வாளர்களும் முரசொலி மாறன், நெடுஞ்செழியன் போன்ற  திராவிடக் கட்சி ஆய்வாளர்களும் பேசியிருக்கிறார்கள். இம்மாநாடு எம்.சி.ராஜா தலைமையில் ஆதிதிராவிட மகாஜனசபை நடத்திய மாநாடு என்பது முக்கியம். இவ்வாறு தொடக்க காலத்தில் நீதிக்கட்சிக்கு மக்கள் திரட்சி காட்டியதும் தலித்துகளே.

1917 முதல் 1919 வரை டி.எம்.நாயர் போன்றோர் உயிரோடு இருந்த காலத்தில் அதாவது நீதிக்கட்சி வளர்ந்து வந்த காலத்தில் கட்சி நடத்தும் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் பஞ்சமர்கள் சுதந்திரமாகப் பங்கேற்றனர் என்பது மட்டுமல்ல, சென்னை நகரில் தனித்துவமான ஆதிதிராவிட ஜனசபா, பறையர் மகாஜனசபா என்கிற இரு அமைப்புகள் முன்னணியில் இருந்தன (நம்பியாரூரன் நூல்) என்பதும் குறிக்கத்தக்கன.

இவ்வாறு வளர்ந்த நீதிக்கட்சி 1920-ல் ஆட்சிக்கு வந்ததும் தலித்துக்களைப் புறக்கணித்தது. ஆனால் செம்மலர் மே-இதழில் எஸ்..பெருமாள் எழுதிய கட்டுரையைப் பாருங்கள். அதில் 1920 முதல் 1926 வரை நீதிக்கட்சியின் சாதனைகளாக 21 அம்சங்களைக் காட்டியுள்ளார். அதில் 11 அம்சங்கள் தலித்துகளுக்காகச் செய்யப்பட்ட சாதனைகளாகக் காட்டப்பட்டுள்ளன.  இவற்றை நான் மறுக்கிறேன். அதில் வெகு சில மட்டுமே சரியானவை; மற்றவை பொய்யானவை; அரைகுறையானவை; ஆங்கிலேயர்களால் செய்யப்பட்டதையும் நீதிக்கட்சியின் சாதனையாகக் காட்டப்பட்டுள்ளது.  அதே போல தலித்துக்களின் முயற்சியால் நடந்த மாற்றங்களையும் நீதிக்கட்சி செய்த மாற்றமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட பிரதிநிதியை முதன்முதலாக அமைச்சராக நியமித்தது என்கிறது எஸ்..பெருமாளின் கட்டுரை. அமைச்சராக இருந்தவர் பெயர் என்ன? யாரால் நியமிக்கப்பட்டார்? எந்த தேதியில்? என்பதையெல்லாம் செம்மலரிலேயே வெளியிடுங்கள். பேசுவோம் அடுத்து தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக தனியாக அமைச்சகத்தை அமைத்தார்கள் என்ற தகவலும் உண்டு. இது 1916-ல் ஆங்கிலேயர் காலத்திலேயே தொழிலாளர் கமிஷன் என்ற பெயரில் ஏற்பட்டு விட்டது. இப்படி ஒவ்வொரு அம்சத்தையும் விரிவாக மறுத்துச் சொல்ல முடியும்.

சென்னை மில் - தொழிலாளர் போராட்டத்தில் திரு.வி..வை நாடு கடத்த மறுத்தது நீதிக்கட்சி என்று பெருமையடைகிறீர்! ஆனால் பறையர்களை சென்னையை விட்டே கடத்த வேண்டுமென்று தியாகராய செட்டி அறிக்கை வெளியிட்டது பற்றி தெரியுமா?

எம்.சி.ராஜா
நீதிக்கட்சியின் தலித் விரோதப் போக்கை எம்.சி.ராஜாவின் அனுபவத்திலிருந்து விவரிக்கிறேன். நீதிக்கட்சி பறித்த தலித்துகளுக்கான வாய்ப்புகளை எம்.சி.ராஜா பட்டியலிட்டார். அவை:

1.         நீதிக்கட்சி பதவியிலமர்ந்து ஓராண்டு காலத்திற்குள் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட மானியத்தில் ஒரு லட்ச ரூபாயை வெட்டியது. அதைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் நலத்துறைகளை மூடியதால் அதில் பணியாற்றிய அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்..

2.         பட்ஜெட் தயாரிக்கப்படுவதற்கு முன் உத்தேசமாக ஒவ்வொரு துறைகளுக்கும் தேவைப்படும் தொகை, அதை செலவிடுவதால் ஏற்படும் பயன் ஆகியவற்றைக் காட்டும் உத்தேச வரவு செலவு பட்டியல் தயாரிக்கப்படும். அதில் 1921-22-ஆம் ஆண்டில் செலவிட உத்தேசித்து 6.47லட்சரூபாயை தொழிலாளர் நலத்துறையும் மற்ற துறைகளும் கேட்டன. ஆனால் சட்டமன்றம் இத்தொகையை ஒரு லட்சமாகக் குறைந்தது. 1922 - 23-ம் ஆண்டிற்காக 12.25 லட்சம் கோரிய போது நிதிக்குழு அதை 7.87 லட்சமாகக் குறைந்தது. இந்த 7.87 லட்சத்தில் 3.25 லட்சம் கூட்டுறவு சங்கங்களுக்குக் கடனுதவி வழங்கவேண்டும். அத்தொகையைக் கடனாகத் திருப்பிச் செலுத்தவேண்டும். ஆனால் இத்தொகையையும் கூட சட்டமன்றத்திற்கு வந்த போது 21, 380 ரூபாயாக குறைக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு படியிலும் உத்தேச செலவுத் தொகையை ஏன் குறைக்கிறார்கள் அல்லது வெட்டுகிறார்கள் என்பதற்கு காரணமே இருக்காது என்கிறார் எம்.சி.ராஜா.

3.         நகராண்மைக் கழகங்களுக்கு சுயாட்சி அளித்தவுடன் நகராண்மை பிரதிநிதித்துவத்திலிருந்து தலித்துகள் துரத்தப்பட்டார்களே ஒழிய அம்மக்களுக்குரிய பங்கு தரப்படவில்லை. சில சமயம் தரப்பட்ட இடங்களையும் நீதிக்கட்சி சாதி இந்துக்களே எடுத்துக்கொண்டனர்.

4.         அரசினர் ஆரம்பப்பள்ளிகளில் ஏழை தலித் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கவேண்டுமென்று சென்னை சட்டசபையில், எம்.சி.ராஜா கோரிய போது இத்திட்டத்திற்கு கல்வி இயக்குநர் கணக்குப்படி ஆண்டிற்கு 67 லட்சம் செலவாகும் என்பதால் நிதிக்குழு ஏற்க மறுக்கிறது என்று பதிலளிக்கப்பட்டது. அத்தகைய உத்தேசச் செலவுத் திட்டத்தின் நகலொன்றைத் தரும்படி எம்.சி.ராஜா கேட்ட போது இதுவரை திட்டமாகத் தீட்டப்படவில்லை என்று கல்வியமைச்சர் பதிலளித்தார்.

5.         சிதம்பரம் தாலுக்கா போர்டுக்கு ஆதிதிராவிடரை ஏன் நியமிக்கவில்லை என்று எம்.சி.ராஜா கேட்டபோது தாலுக்கா போர்டு அலுவலகம் சாதி இந்து ஒருவரின் கட்டிடத்தில் இயங்கி வருவதால், அக்கட்டிடத்தில் ஆதிதிராவிடர் நுழைவதை விரும்பாததால் பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்றார் அமைச்சர்.

6.         1923-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தலித் மாணவர்களுக்கு வழங்கப்படும் உபகாரச் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென்று எம்.சி.ராஜா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் ஏழ்மையென்பது ஆதிதிராவிடருக்கு மட்டுமே உரிய தனிச்சொத்தல்ல. மற்ற வகுப்பினரிலும் ஏழைகள் உண்டு என்றுக் கூறி தீர்மானத்தை மறுத்தார். மறுநாள் விவாதத்தில் பதிலளித்துப் பேசிய எம்.சி.ராஜா ஏழ்மை தாழ்த்தப் பட்டோருக்கு மட்டும் உரியதல்ல. பிராமணர்களிலும் ஏழைகளுண்டு என்ற உண்மையை அமைச்சர் எப்போது கண்டுபிடித்தார்? அமைச்சராவதற்கு முன்பே கண்டாரா? பின்பு கண்டு பிடித்தாரா? பிராமண மாணவர்களிலும் ஏழைகள் உண்டென்றால் அவவர் ஏன் அம்மாணவர்களுக்காக பாடுபடக்கூடாது? தாழ்த்தப் பட்ட மாணவர்களின் ஏழ்மைக்கும் பிறசாதி மாணவர்களின் ஏழ்மைக்கும் வேறுபாடு இல்லையென்று எண்ணுகிறாரா? என்று கேள்வியெழுப்பியதோடு எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்டோரின் கோரிக்கைகளை நான் வலியுறுத்துகிறேனோ, அப்போதெல்லாம் எம் கோரிக்கைகளைக் குறைக்கும் நோக்கத்துடன் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முன்னிற்கின்றனா;. ஒடுக்கப்பட்ட அல்லது தீண்டப்படாத வகுப்பினரிடமிருந்து வேறுபட்டு நிற்கும் இவர்கள் யார்? சாதி இந்துக்கள்தாம் என்று பேசி முடித்தார். (ஆதாரம்: பெருத்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள் - முதல் தொகுதி, தொகுப்பாசிரியர் : வே.அலெக்ஸ், தமிழில்: .சுந்தரம், வெளியீடு: எழுத்து, மதுரை -4, 2009).

7.         1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி ஏழுமுறை அமைச்சரவை அமைத்தும் ஒருமுறை கூட அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை தலித்துகளுக்கு வழங்கியதில்லை.

நீதிக்கட்சி பற்றி பொத்தாம் பொதுவாக சொல்லப்பட்டு வந்த பிம்பங்கள் தலித்துகளால் வெளிக்கொணரப்படும் ஆதாரப்பூர்வமான புதிய ஆவணங்கள் வழி கட்டுடைக்கப்பட்டுவிட்டன. இவற்றை யாரும் மறுக்க முடியாது. ஆனால் திராவிட இயக்கத்தைக் கண்ணை மூடிக்கொண்டு படித்துவிட்டு அப்படியே தங்கள் முகாம்களில் ஒப்புவிக்கும்முன் தலித் ஆவணங்களையும் பரிசீலிக்க படிக்க வேண்டுகிறேன். பொய்யான வரலாற்றைத் தன் கட்சித் தொண்டர்களிடமும் வாசகர்களிடமும் கொண்டு சேர்ப்பது மாபெரும் கருத்தியல் வன்முறை.

மே மாதம் செம்மலர் இதழில் வந்துள்ள (10 கடிதங்களில்) 5 கடிதங்கள் எஸ்..பெருமாளின் கட்டுரையைப் பற்றி குறிப்பிடுகின்றன. அக்கடிதங்கள் எஸ்..பெருமாள் தரும் இந்த பிழையான வரலாற்றுத் தகவல்களை உண்மையாக ஏற்றுப் போற்றியிருக்கிறார்கள். நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும் - அறிவு நாணயமும் உள்ளோர் எல்லோரும் ஏற்பாடுகள் ஆழமான கட்டுரை / ஏராளமான தகவல்கள் / பாதுகாக்க வேண்டியதொரு ஆவணம் / மார்க்சிய ரீதியான சரியான ஆய்வு / இயங்கியல் பார்வையை முன் வைக்கிறது என்றெல்லாம் புகழாரங்கள். எதிர்காலத்தில் இதுவே வரலாறாக நிலைத்து விடும் அபாயமிருக்கிறது.

இதையெல்லாம் நான் சொல்வது மார்க்சிஸ்டுகள் பொய் சொல்லுகிறார்கள் என்ற பொருளில் அல்ல. அது என்நோக்கமுமல்ல. ஆனால் பொய்யையும் மெய்யையும் ஆராய்ந்து பார்க்கும் நிலையில் நீங்கள் இல்லை என்கிறேன். திராவிட இயக்கத்தையும் கருத்துக்களையும் கடந்த காலத்தில் புரிந்து கொள்ளத் தவறி விட்டோம் என்ற விமர்சனத்தைச் சரி செய்ய வேண்டிய அவசரத்தில் திராவிட இயக்கம் புனைந்து வைத்த தகவல்களையெல்லாம் எந்தவித மறு ஆய்வும் இல்லாமல் நாங்களும் புரிந்து கொண்டோம் / பேசுகிறோம் என்று காட்ட வேண்டிய நிலையிலிருக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள்.
திராவிட இயக்கம் பற்றிய தங்களின் கடந்த காலக் குறைகளைச் சரிசெய்ய வேண்டுமென்பதற்காக திராவிட இயக்கத்தின் தலித்துகள் பற்றிய பொய்களை மறு உற்பத்தி செய்வதுதான் உரிய வழியா?

தலித்துகளுக்கு களத்தில் ஆதரவாக செயற்பட்டால் மட்டும் போதாது, கருத்தியல் தளத்திலும் செயற்படவேண்டும். அதற்குத் திராவிடக் கட்சிகளின் பொய்கள்பின் சென்றால் தீர்வு வராது. தலித்துகள், கருத்தியல் தளத்தில் சிறுபான்மையாக நடத்தும் போராட்டங்களை கவனிக்கவும், அதை பொருத்தமாக புரிந்து ஏற்கவும் வேண்டும்.